March 25, 2017 தண்டோரா குழு
நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே 7-ம் தேதி நடக்க உள்ளது என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் பகுதிகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு தாங்களாகவே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தின. இதில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.