March 28, 2017
தண்டோரா குழு
விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக மாபெரும் போராட்டம் நடத்தினர். இதன் துவக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் தான் துவங்கியது. இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்த தடை விதிக்கபட்டது.
இந்நிலையில், வறட்சி நிவாரணம் வேண்டி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, விவாசாயிகளுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டுக்கு நடத்தியது போல், மீண்டும் சென்னை மெரினாவில் ஒன்று திரண்டு, போராட்டம் நடத்தலாம் என பேஸ்புக்கில் தகவல் பரவி வருகிறது.
இதையடுத்து சென்னை போலீசார் உஷார் அடைந்துள்ளனர். மெரினா கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் உள்ள கடைகளை மூடச்சொல்லி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும், போராட்டம் என்ற பெயரில் தேவையற்ற வதந்தி பரப்புவோர், தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – துணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.