March 28, 2017 தண்டோரா குழு
கர்நாடகாவில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்கள், பெண்களுக்கு இரவுநேர பணி வழங்க வேண்டாம் என கர்நாடக அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை செய்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான சட்டசபை குழு உறுப்பினர்கள் பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுக்கு சென்று, அவர்களுக்கு வழங்கப்படும் பணி குறித்து ஆய்வு நடத்தியதுடன், ஊழியர்களின் கருத்து கேட்டுள்ளனர். பின்னர், அக்குழு கர்நாடக அரசிற்கு சில பரிந்துரைகள் வழங்கியுள்ளது.
அதில், பெண்களுக்கு இரவு நேர பணி வழங்க வேண்டாம். அவர்களுக்கு காலை அல்லது மதிய நேர பணியை ஒதுக்கலாம். ஆண்களுக்கு மட்டும் இரவு பணி வழங்கலாம். பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை. இதனால் பல குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். அல்லது குறைந்த தண்டனை மட்டும் கிடைக்கிறது. பெண் சிசு கொலை செய்யும் டாக்டர்கள், நர்சுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.