March 31, 2017
குடிநீர் கிடைக்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசியில் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; கோவை மாவட்டத்தில் அதிகளவு வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் பற்றாக்குறை என கண்டறியும் பகுதிகளில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவில் அந்தந்த பகுதிகளில் அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதி வாரியாகவும் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்குவதன் விவரம் குறித்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் தேவையினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அங்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 18005996000 பொருத்தப்பட்டுள்ளது.
இதில் புகார்கள் குறித்து தெரிவிப்பவர்களுக்கு உடனடியாக அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் சிலர் பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பி சாலை மறியல் போன்ற வன்முறை செயல்களை தூண்டி வருகிறார்கள் இதற்கு பொதுமக்கள் யாரும் துணைபோக வேண்டாம்.
தங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என்றால் தங்கள் பகுதியில் உள்ள சமந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவித்தோ அல்லது கட்டணமில்லா தொலைபேசியில் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தேவையான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிலையில் யாரேனும் சாலை மறியல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.