March 31, 2017 தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.கே கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து நீதிபதி எச்.ஜி ரமேஷ் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டுவந்தார்.
எனினும், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு வாரங்களில் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.
கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்தவரான இந்திரா பானர்ஜி, கடந்த 1985ஆம் ஆண்டு, கொல்கத்தா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இவர் 17 வருட வழக்கறிஞராக இருந்த பின் , 2002ஆம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.
அதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இந்நிலையில், கொலீஜியத்தின் பரந்துரையின் பேரில் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.