March 31, 2017 தண்டோரா குழு
முஹம்மத் ஜின்னாவின் வீட்டை தங்களிடம் திருப்பி தருமாறு பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவிற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முஹம்மது அலி ஜின்னா. இவர் வாழ்ந்த வீடு மகாராஸ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் உள்ளது. இந்நிலையில், மகாராஸ்டிராபா.ஜ.க எம்.எல்.ஏ மங்கள் பிரபாத் லோதா, “தெற்கு மும்பையில் உள்ள ஜின்னாவின் வீட்டில்தான் இந்திய பாகிஸ்தான் பிரிவை குறித்த சதி தீட்டப்பட்டது. ஆகவே, அந்த வீட்டை இடித்து விட வேண்டும்” என்று பொது பணித்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வேண்டுக்கோள் விடுத்தார்.
மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் எதிரி சொத்து மசோதா நிறைவேறியுள்ளது. அதனால் ஜின்னாவின் வீடு இந்தியாவிற்கு சொந்தமானது. ஆகவே ஜின்னாவின் வீட்டை பராமரிக்க பொதுப்பணி துறை கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க கூடாது. அந்த கட்டடம் இடிக்கப்பட வேண்டும். அந்த இடத்தில் மகாராஷ்டிரா கலாச்சாரம் மற்றும் இந்தியாவில் புகழ்பெற்ற சரித்திரத்தை சித்தரிக்கும் கலைகள் பொருத்தப்பபட்ட கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்” என்றார்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், ஜின்னா வாழ்ந்த வீட்டை பாகிஸ்தானிடம் தந்துவிட வேண்டும் என்று இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்ப்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்திதொடர்பாளர் நபீஸ் சாகிரா கூறுகையில்,
“மும்பையிலுள்ள ஜின்னாவின் வீடு, எங்கள் தேசத்தந்தை கியைத்-இ-ஆசாம் முஹம்மத் அலி ஜின்னாவிற்கு சொந்தமானது. பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமானதை இந்திய அரசு மதிக்க வேண்டும். அந்த வீட்டை இந்திய அரசு பாதுகாக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். பாகிஸ்தானுக்கு சொந்தமான பொருளை பாகிஸ்தானுக்கே திருப்பி தரவேண்டும். பாகிஸ்தானின் உடைமைகளை பல முறை இந்திய திருப்பி தருவதாக கூறியது, ஆனால் இதுவரை சொன்னதை செய்யவில்லை” என்றார்.