April 3, 2017 தண்டோரா குழு
இந்திய தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களுக்கான விசா எண்ணிக்கையை குறைத்து கொண்டது சிங்கப்பூர் அரசு.
சிங்கப்பூர் நாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணிபுரிய வரும் ஊழியர்களுக்கான விசா வழங்கும் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.
ஊழியர்களுக்கு விசா வழங்குவதை 2016- ம் ஆண்டின் துவக்கம் முதலே சிங்கப்பூர் அரசு படிப்படியாக குறைத்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் அரசு தரப்பில் இது குறித்து கூறுகையில் “இந்திய மென்பொருள் ஊழியர்களின் வருகை அதிகரிப்பதால், உள்ளூர் மக்களுக்கு வேலையில்லாமல் போகிறது.” என்றனர்.
மேலும் ஊழியர்களின் வருகையால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு கருதுவதே இதற்கு காரணம் என பொருளாதாரா வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர்.
அதே போல் சிங்கப்பூரை சேர்ந்த உள்நாட்டு பணியாளர்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு, ஹெச்.சி.எல், டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, காங்னிசென்ட் மற்றும் எல்.அன்டு.டி ,இன்போடெக் ஆகிய நிறுவனங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்திய நிறுவனங்களும் வேறு நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.