April 3, 2017 தண்டோரா குழு
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 24க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கோரி பாடம் நாராயணன் என்ற சமூக ஆர்வலர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வரும் மே 14ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணி இன்னும் நிறைவடையவில்லை, ஆகையால் உயர்நீதிமன்றம் கூறியது படி மே 14ல் தேர்தல் நடத்த இயலாது எனவும் கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதன் தனிச்செயலாளர் ராஜசேகர் என்பவர் பதில் பதில் மனு அளித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்தை, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மேலும் தாங்கள் குறிப்பிட்ட மே மாதம் 14-ம் தேதிக்குள், தமிழகத்தில் உள்ளாட்சிதேர்தலை நடத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.