April 3, 2017 தண்டோரா குழு
35 ஆண்டுகளுக்கு முன் நூலகத்திலிருந்து காணாமல்போன ‘பிட் டைம் ரீடோர்ன்’ என்னும் புத்தகம் பத்திரமாக அதே நூலகத்திற்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அமெரிக்க நாட்டில் நடந்துள்ளது.
அமெரிக்க நாட்டின் மொண்டான மாநிலத்தில் ‘கிரேட் பால் பப்ளிக் லைப்ரரி’ என்னும் நூலகம் அமைந்துள்ளது. அந்த நூலகத்தின் நூலக இயக்குனர் கேத்தி நோராவிருக்கு சமீபத்தில் ஒரு பார்சல் கிடைத்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது ‘பிட் டைம் ரீடோர்ன்’ என்னும் புத்தகத்தின் 1975-ம் ஆண்டு பதிப்பு இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார். காரணம் அந்த புத்தகம் 1982-ம் ஆண்டு அந்த நூலகத்திலிருந்து காணாமல் போன புத்தகமாகும்.
அதை திறந்து பார்த்த போது, அதில் 2௦௦ டாலருக்கான காசோலையும் மன்னிப்பு கடிதமும் இருந்தது.
“நான் செய்த தவறின் குற்ற உணர்வு என் மனதிற்கு தொல்லையாக இருந்தது. நான் செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்கிறேன். இந்த புத்தகத்தை சுமார் 25 முறை படித்துள்ளேன். 2௦13-ம் ஆண்டு இறந்துவிட்ட இதன் எழுத்தாளரிடமிருந்து அவருடைய கையெழுத்தையும் வாங்கியுள்ளேன்.
இந்த பதிப்பு பழுதடைந்து வருவதை கண்டு, அதை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்து, இறுதியாக அதன் உரிமையாளர் இடமாகிய பப்ளிக் நூலகத்திற்கு திருப்பி அனுப்புகிறேன். இது என்னுடைய புத்தகம் அல்ல. ஆனால் இது பப்ளிக் நூலகத்திற்கு சொந்தமானது.
இதை நூலகத்திலிருந்து திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தது.
இதை படித்த கேத்தி நெகிழ்ச்சியடைந்தார். இதை மீண்டும் இருந்த இடத்தில் சேர்த்துள்ளார். “இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, காணமல் போன இந்த புத்தகம் திரும்பி வரும் என்று நினைத்து பார்த்ததுயில்லை. இதை எடுத்த நபர் இதை தூக்கி போடாமல் பத்திரமாக வைத்து, திருப்பி தந்த அவருடைய நல்ல உள்ளதை பாராட்டுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.