April 4, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காக்களின் பராமரிப்பு செலவுக்காக தனது சம்பளப் பணம் 78 ஆயிரம் டாலர்களை டொனால்ட் டிரம்ப் தானமாக வழங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2௦16-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். ஆனால் யாரும் எதிர்ப்பார்காத வண்ணம் கிளின்டனை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக வெற்றி வாகை சூடினார் டிரம்ப்.
தேர்தல் பிரசாரத்தின்போது, “நான் தேர்தலில் வெற்றிப்பெற்றால், அரசின் கருவூலத்திலிருந்து எனக்கு கொடுக்கப்படும் சம்பள பணம் முழுவதையும் நற்காரியங்களுக்கு நன்கொடையாக தருவேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய பூங்காக்களின் பராமரிப்பு செலவுக்காக தனது சம்பளப் பணம் 78 ஆயிரம் டாலர்களை டொனால்ட் டிரம்ப் தானமாக வழங்கியுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“அமெரிக்க அதிபராக பதவியேற்கும் முன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய்களை சம்பாதித்தார் டிரம்ப். அவர் தன் முதல் காலாண்டின் சம்பளமான 78,333 டாலர்களை தேசிய பூங்கா சேவைக்கு நன்கொடையாக தந்துள்ளார். பிரசாரத்தில் அவர் கூறியதை மறக்காமல் நிறைவேற்றியுள்ளார்” என்றார்.
417 தேசிய பூங்காக்கள், நினைவு சின்னங்கள் ஆகியவற்றை உள்துறை செயலாளர், ரயன் ஜிங்கே பாராமரித்து வருகிறார். “டிரம்பின் இந்த முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.