April 4, 2017 தண்டோரா குழு
சென்னையில் திருநங்கைகளுக்காக தனி கழிப்பறை அமைக்கும்படி மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் பல இடங்களில் மறுக்கப்படுகிறது. தனிக்கழிப்பறை இல்லாததால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆகவே திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை அமைக்க உத்தரவிடக் கோரிசென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜ்என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்தவழக்கு, பொறுப்பு நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு வழக்கறிஞர், சமூக நலத்துறை இயக்குநர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தண்டையார்பேட்டை, சைதாப்பேட்டை, சூளைமேடு, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில், திருநங்கைகளுக்கு தனிக்கழிப்பறை அமைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கழிப்பறைகள் அமைக்கவும், அது தொடர்பாக சமூக நலத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் அறிக்கை தாக்கல் செய்யவும் 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.