April 5, 2017 தண்டோரா குழு
விடுதி மாணவர்களை திடீரென வேறு கல்லூரிக்கு இட மாற்றம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மருதமலை பகுதியிலுள்ள அரசு சட்ட கல்லூரியில் சுமார் 1400 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் சிலர் இரண்டாமாண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் விசாரணைக்குழு அமைத்து நடத்திய விசாரணையில் மூன்றாம் ஆண்டு மாணவர்களான கருணாகரன், ஆனந்தசித்தர், ஆனந்தகுமார், முரளி, முனீஸ்வரன் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களான தமிழ்செல்வன், வினோத்குமார், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ராக்கிங் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து எட்டு மாணவர்களும் சட்டக்கல்வி இயக்குநரின் உத்தரவின் பேரில் வெவ்வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 6 மாணவர்கள் உத்தரவுக்கிணங்கி வேறு கல்லூரிக்கு சென்ற நிலையில் இரண்டு மாணவர்கள் தாங்கள் இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்களுடன் கல்லூரி வளாகத்திலேயே வகுப்புகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 40 மாணவர்களுடன் போராட்டத்தை துவங்கியுள்ளதாகவும் நாளைய தினம் அனைத்து மாணவர்களையும் திரட்டி போராட்டம் நடத்துவதுடன் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்த மாணவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மட்டுமே வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினர்.
அதே வேளையில் விசாரணை குழுவின் விரிவான அறிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அரசின் உத்தரவு படியே இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.