April 6, 2017 தண்டோரா குழு
ஏர்- இந்தியா விமான ஊழியரை காலணியால் தாக்கிய சம்பவத்திற்காக, மக்களவையில் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் மன்னிப்புக் கோரினார்.
சிவசேனா மக்களைவை உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட் கடந்த 23- ஆம் தேதி ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியரை, காலணியால் தாக்கினார். இதையடுத்து, அவர் விமானத்தில் பயணிக்க விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. இருப்பினும் அவர் விமானபயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய பலமுறை முயற்சி செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவருக்கு டிக்கெட் வழங்க மறுத்து விமான நிறுவனங்கள் ரத்து செய்தன.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் விளக்கமளித்த அவர்,தனது செயலில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை எனக் குறிப்பிட்டார். எனினும், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் அறிவுறுத்தலின் பேரில், நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியதாகவும், இதுதொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகத்திடம் தாம் மன்னிப்புக் கோர மாட்டேன் என்றும் எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தெரிவித்தார்.
முன்னதாக,சிவசேனா எம்பி, விமான நிலைய அதிகாரியிடம் மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கான பயணத் தடை நீடிக்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதிராஜு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.