April 8, 2017
tamilsamayam.com
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் கோலகலமாக துவங்கியது. இதில் ராஜ்கோட்டில் நடக்கும் மூன்றாவது லீக் போட்டியில் குஜராத், கொல்கத்தா அணிகள் மோதின.
இதில் ‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி, கேப்டன் கவுதம் காம்பிர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதில் குஜராத் அணியில் அதிரடி வீரர் பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஜேசன் ராய், ஆரோன் பின்ச் தேர்வு செய்தனர்.
மெக்கலம் மிரட்டல்:
இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர் ஜேசன் ராய் (14) ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் மெக்கலம் (35) ஓரளவு கைகொடுத்தார். தொடர்ந்து வந்த பின்ச் (15) வந்த வேகத்தில் பெவிலிய திரும்ப, குஜராத் அணி ரன் வேகம் குறைந்தது.
ரெய்னாவுக்கு ராசி:
இதையடுத்து தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த ரெய்னா, ஓரளவு அதிரடியாக ரன்கள் சேர்த்தார். இவர் கொடுத்த இரண்டு வாய்ப்புக்களை கொல்கத்தா வீரர்கள் கோட்டைவிட, ஐபிஎல் அரங்கில் 29வது அரைசதம், ஐபிஎல் அரங்கில் அதிகரன்கள் சேர்த்த வீரர் என இரண்டு மைல்கல்களை எட்டினார் ரெய்னா.
கார்த்திக் கலக்கல்:
கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக், கிறிஸ் வோக்ஸ் வீசிய 19வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என பறக்கவிட்டார். இதே ஓவரில் ஒரு ரன் எடுக்க ஓடிய போது வோக்ஸை கவனிக்காமல் தாறுமாறாக ரெய்னா மோத, அவர் கீழே தடுமாறி விழுந்தார்.
தொடர்ந்து போல்ட் வீசிய கடைசி ஓவரில் குஜராத் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
சாதனை ஜோடி:
எட்டக்கூடிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு, கேப்டன் காம்பிர், கிறிஸ் லின் ஜோடி துவக்கம் அளித்தது. குஜராத் அணியின் பந்துவீச்சை குதறித்தள்ளிய இந்த ஜோடி, ஐபிஎல் அரங்கில் பல்வேறு சாதனைகளை தகர்த்து புதிய சாதனை படைத்தது.
கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க, குஜராத் அணி பவுலர்களின் முயற்சி அனைத்தும் மண்ணாக போக, கொல்கத்தா அணி14.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 184 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. லின் (93 ரன்கள், 6 பவுண்டரி, 8 சிக்சர்), காம்பிர் (76 ரன்கள் 12 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். கிறிஸ் லின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
உலக சாதனை:
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அரங்கு உட்பட அனைத்துவிதமான டி-20 அரங்கிலும் சேர்த்து, 10 விக்கெட் மிஞ்சிய நிலையில் வெற்றிகரமாக எட்டப்பட்ட இலக்கு (184 ரன்கள்) என்ற புது உலக சாதனை படைத்தது கொல்கத்தா அணி.