April 10, 2017 தண்டோரா குழு
திரைப்படத்தை விமர்சியுங்கள் ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீகள் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள படம் நெருப்புடா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், தனுஷ், விஷால், லாரன்ஸ், பிரபு, கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரஜினிகாந்த்,
அண்ணாமலை படத்தில் நடிக்கும் போது சிவாஜியை மனதில் வைத்தே நடித்தேன். சிவாஜி சார் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு போட்டியே இருந்ததில்லை. தனது அப்பா, தாத்தா பெயரை காப்பற்ற வேண்டிய பொறுப்பு விக்ரம்பிரபுக்கு உள்ளது என்றார்.
மேலும், ஊடகங்கள் சினிமாவை விமர்சிக்கலாம் ஆனால் யார் மனதையும் புண்படுத்தாத அளவிற்கு வார்த்தையில் கவனம் வேண்டும்.அதைப்போல் தயாரிப்பாளர்களும் படம் தயாரிக்கும் போது படத்தில் பணியாற்றிய அனைவரும் லாபம் பெறவேண்டும் என நினைக்க வேண்டும் தவிர இலாபம் அடைய வேண்டும் என நினைக்க கூடாது என்றார்.
படத்தில் விக்ரம் பிரபு ரஜினிகாந்த் ரசிகராகவும் தீயணைப்பு வீரராகவும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.