April 10, 2017 தண்டோரா குழு
ஆர்.கே.நகரில் பிரச்சாரத்தின் போது தேசியக் கொடியை அவமதித்த வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவிருந்த சூழ்நிலையில் கடந்த 6-ம் தேதி, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா (ஒ.பி.எஸ் அணி)அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, ஆர்.கே.நகரில் முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஜெயலலிதாவின் சடலம், சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருப்பது போன்ற பொம்மையை வைத்து அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சவப்பெட்டி பொம்மை மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது போல அது வடிவமைக்கப்பட்டிருந்தது.
இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் மா.பா. பாண்டியரஜானை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் பாண்டியராஜன் இறங்கியுள்ளதாகவும் அக்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.