April 11, 2017 தண்டோரா குழு
பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நெல்லையை சேர்ந்த ராகவன் என்பவர் தனியார் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் அளித்த மனுவில்
“நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் பெப்சி, கோக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து வணிகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் குறைந்த கட்டணத்தில் 48 லட்சத்து 66 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். தற்பொழுது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கூறுகையில் ”கடந்த நவம்பர் மாதம் முதல் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படுவதில்லை. சிப்காட்டில் உள்ள பிற நிறுவனங்களுக்கு குடிநீர் தேவைகளுக்காக மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை கேட்ட நீதிபதிகள் “ வரும் 27-ம் தேதிக்குள் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.” மேலும் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.