April 11, 2017 தண்டோரா குழு
புதிய சட்டத்திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
சாலை பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டம் 1988, சில திருத்தங்களுடன், சட்டத்திருத்த மசோதாவாக திங்கட்கிழமை(ஏப்.,10) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன் படி, வாகன விபத்துக்களில் உயிரிழப்போர் குடும்பத்துக்குப் பத்து லட்ச ரூபாய் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
அபராதம்:
புதிய சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறினால் ரூ.500-ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000-மும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000-மும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000மும் அபராதமாக விதிக்கப்படும்.
ஆதார் கட்டாயம்:
சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சமாக டிரைவிங் லைசன்ஸ், வாகனப் பதிவு என எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயப்படுத்தப்பட உள்ளது.