April 12, 2017 tamilsamayam.com
இந்திய சினிமாவின் இயக்குனர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள எஸ்.எஸ்.ராஜமௌலி, பொது மேடை ஒன்றில் மீண்டும் ஒரு முறை நடிகை ரம்யாகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பாகுபலி 2’ தமிழ் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, தனது படத்தின் கதாநாயகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
‘பாகுபலி’ திரைப்படத்தில் மிக முக்கிய, அழுத்தமான கதாப்பாத்திரமான சிவகாமி கதாப்பாத்திரத்திற்காக வேறு ஒரு நடிகையை அணுகியதை எண்ணி வெட்கப்படுவதாகவும், அதற்காக ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே ஹைதராபாத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிலும், பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனிடம் ராஜமௌலி மன்னிப்புக் கேட்டார்.
முன்னதாக இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் மோகன் பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சுவை அணுகியதாகவும், அவர் வயதை காரணம்காட்டி, முன்னணி நடிகர்களான பிரபாஸ், ராணாவுக்கு திரையில் அம்மாவாக நடிக்க விருப்பமில்லை என கூறி அந்த வாய்ப்பினை மறுத்துவிட்டதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. அவர் நிராகரித்த பின்னரே ரம்யா கிருஷ்ணன் இந்த கதாப்பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தேடித் தந்த சிவகாமி கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு ராஜமௌலி தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
தென்னிந்தியாவில் மிகப் பெரிய ஸ்டாரான சத்யராஜ் சாரிடம் இப்படத்தின் கதையை கூறும்போது, மற்றொரு நடிகரின் காலை தலைமீது வைக்க அனுமதிப்பாரா என்ற பயம் இருந்தது. ஆனால், அந்தக் காட்சி படப்பிடிப்பின்போது, தன்னை ஒரு ஸ்டார் என்று கருதாமல், கட்டாப்பா கதாப்பாத்திரமாகவே மாறி அந்த காட்சியை செய்துக் கொடுத்தார் எனவும் ராஜமௌலி கூறியுள்ளார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘பாகுபலி 2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.