April 13, 2017 தண்டோரா குழு
விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு பொது நல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது நீதிபகள் கூறியதாவது;
“தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வது வேதனை அளிக்கிறது. விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது. விவசாயிகளின் பிரச்னையை தமிழக அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். ஆனால், தமிழக அரசு இதில் அக்கறை காட்டவில்லை.
விவசாயிகளுக்கான திட்டங்கள், சலுகைகள் குறித்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை 2 வார காலத்திற்குள் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் தில்லியில் 3௦ நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.