April 14, 2017
தண்டோரா குழு
திருமணத்துக்கு பிறகு இந்திய கடவுச்சீட்டில் பெண்கள் தங்களது பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மும்பையில் உள்ள இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் மகளிர் பிரிவு கூட்டம் வியாழக்கிழமை(ஏப்ரல் 13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அவர் பேசியதாவது;
“இந்தியாவில் பெண்கள் திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்டில்) தங்களது தந்தையின் பெயரை இணைத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் திருமணத்துக்கு பிறகு, அவர்கள் கடவுச்சீட்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய சுழல் இருந்தது.
இதன் காரணமாக பெண்கள் பெரும் சீரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சீரமத்தை போக்கும் வகையில் இனி திருமணத்துக்கு பிறகும், அதே பெயரை பெண்கள் கடவுச் சீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம், மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து வளர்ச்சி திட்டங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
அதற்கு உதராணமாக, பெண்களுக்கு பேறு கால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது,” என்றார் மோடி.