April 14, 2017 தண்டோரா குழு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளவர் சி.எஸ். கர்ணன். இவர், சென்னை உயர்
நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சம்மன் அனுப்பட்டும் நேரில் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டத்தை தொடர்ந்து கடந்த மாதம் 31ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் ஆஜர் ஆனார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி கர்ணன் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நீதிபதி கர்ணன், நேற்று கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் கையெழுத்திட்டு அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
அதில், “மார்ச் 31-ந்தேதியன்று, எனது மனநலம் எப்படி இருக்கிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் கேள்வி எழுப்பினார். அதை அவரது அமர்வில் இடம்பெற்றிருந்த 6 நீதிபதிகளும் வழிமொழிந்தனர்.
திறந்த நீதிமன்றத்தில் இவ்வாறு அவர்கள் கூறி என்னை அவமதித்தனர்.எனவே அந்த 7 பேரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989-ன்படி குற்றவாளிகள்” என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன்,
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் அமர்வு, என்னை வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் அவமதித்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டம், 1989-ஐ மீறிவிட்டனர்.
இது தொடர்பாக நான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அவர்களை கூறி உள்ளேன். இதற்காக வரும் 28-ந்தேதி காலை 11.30 மணிக்கு எனது ரோஸ்டேல் உறைவிட கோர்ட்டு (இல்லம்) முன்பாக 7 நீதிபதிகளும் ஆஜர் ஆவார்கள் என்று கூறினார்.