April 17, 2017 தண்டோரா குழு
“சீனிவாசனை ஐசிசியின் எந்தப் பொறுப்புக்கும் பிசிசிஐ பரிந்துரை செய்யக் கூடாது” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
லோதா குழுவின் பரிந்துரைப்படி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் யார் யார் என்பதை உச்சநீதிமன்றம் அறிவிக்காததால் ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிசிசிஐ பிரதிநிதியைத் தேர்வு செய்வதற்கான சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற இருக்கும் பிசிசிஐ சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் பிசிசிஐ தலைவரும் தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான என்.சீனிவாசன் பங்கேற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. சீனிவாசனை ஐசிசியின் எந்த பொறுப்புக்கும் பிசிசிஐ பரிந்துரை செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அமிதாப் சௌத்ரி, ராகுல் ஜோஹ்ரி, வினோத் ராய் ஆகியோர் ஏப்ரல் 24ஆம் தேதி நடக்கும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.