April 18, 2017 தண்டோரா குழு
தினகரன் சசி குடும்பத்தை ஒத்துக்கிவைத்து ஆட்சி நடத்துவோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற்கான முயற்சி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினகரனை ஓரங்கட்டி விட்டு, இரு தரப்பும் இணைவதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைக்கொடி காட்டியிருந்தார். அதற்கு, சசிகலா அணியைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
அப்போது, கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. தினகரன், சசி ஆகியோரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சு வார்த்தை நடத்த எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம். ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றார்.
மேலும், இனி கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன், சசி ஆகியோரின் தலையீடு எள்ளளவும் இருக்காது, இருக்கவும் கூடாது. தினகரன் குடும்பத்திற்கு இனி கட்சியில் இடம் இருக்காது. தொண்டர்களின் விருப்படி ஆட்சி அமையும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியை வழி நடத்த குழு அமைக்கப்படும்
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.