April 20, 2017 தண்டோரா குழு
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தில்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னை வந்து டிடிவி தினகரனிடம் வரும் ஏப்ரல் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மனை கொடுத்தனர்.
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் தர முயற்சி செய்ததாக டிடிவி தினகரன் மீது தில்லி குற்ற பிரிவி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தரா என்பவரை தில்லி போலீசார் கைது செய்தனர். சுகேஷ் சந்தரா கொடுத்த தகவலின் பேரில் தான் டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த தில்லி போலீசார் நேற்று இரவு சென்னை வந்தனர். தில்லி குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் , இன்ஸ்பெக்டர் நரேந்திரஷா ஆகியோர் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீடு சென்று அவரிடம் வரும் ஏப்ரல் 21- ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர். டிடிவி தினகரன் சம்மனை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சம்மனை அளிக்க வந்த போலீருக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் வீட்டிற்கு முன் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.