April 20, 2017
தண்டோரா குழு
பிரம்மாண்டத்தின் உச்சமாக ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் உருவாகி இருக்கிறது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வரும் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. பலரும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தை நாங்கள் எங்கள் மொழியில் வெளியிட விட மாட்டோம் என கன்னடர்கள் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். காரணம் நடிகர் சத்யராஜ் மேல் அவர்களுக்கு இருக்கும் கோபம். இதற்காக படக்குழுவினரும் அவர்களுடன் பல பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், சத்யாராஜை கண்டித்து கர்நாடகாவில் கடையடைப்பும் நடந்து வருகிறது. இதையடுத்து, இறுதியாக இயக்குனர் ராஜமௌலி இப்பிரச்சனை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், நடிகர் சத்யராஜ் பல வருடத்திற்க்கு முன்பு பேசியிருக்கிறார். அவர் பேசியதற்கும் படத்திற்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த படத்தை நீங்கள் தடை செய்வதால் அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இப்படத்திற்காக பல லட்சம் மக்கள் உழைத்திருக்கிறார்கள். சத்யராஜ் மீதுள்ள கோபத்தை பாகுபலி 2 திரைப்படத்தின் மீது காட்டுவது சரியல்ல படம் வெளியாக ஒத்துழைப்பு தாருங்கள் என ராஜமவுலி கன்னட ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.