April 21, 2017
தண்டோரா குழு
இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க, அ.தி.மு.க.,வின் இரண்டு அணிகளுக்கும் ஜூன் 16-ம் தேதி வரை கால அவசகாசம் அளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க., ஒ.பன்னீர்செல்வம் அணி, வி.கே. சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. இதனிடையே ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சென்னை ஆர்கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் இரு அணிகளும் தனிதனியே வேட்பாளரை அறிவித்து இரட்டை இலைச் சின்னத்துக்குப் போட்டி போட்டன. மேலும் இந்த சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என்று ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தன.
இதனால் அந்தச் சின்னத்தை முடக்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் இரு அணிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து இரு அணிகளும் இரட்டை இலைச்சின்னத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய, இரண்டு அணிகளுக்கும் ஜூன் 16-ம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளது.