April 22, 2017 தண்டோரா குழு
இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராவதற்காக அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தில்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க,,வின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்தன. இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என இரு அணிகளும் உரிமை கொண்டாடின இதனால் இரட்டை இலைச் சின்னம் இந்தியா தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
இது குறித்த விசாரணை இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் டி.டி.வி.தினகரன் ரூ.60 கோடி வரை பேரம் பேசி லஞ்சம் கொடுத்ததாக கூறி தில்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தில்லி போலீஸ் முன்பு நேரடியாக இன்று ஆஜராக வேண்டும் என்று தில்லி குற்றப்பிரிவு போலீஸ் சென்னை வந்து நேரடியாக தினகரனிடம் சம்மன் அளித்தனர்.
இதனை அடுத்து தில்லியில் ஆஜராவதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தினகரன் தில்லி புறப்பட்டார். அவர் ஆஜராவர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.