April 25, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி, மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் கார்டு தயாரான பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு, செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். தகவல் பெறப்பட்ட பின்னர், நியாய விலை கடைகளுக்கு நேரில் சென்று, மின்னணு குடும்ப அட்டைகளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறுகையில்
“ கோவை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி, மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போலிகள் அற்ற குடும்ப அட்டைகள் வழங்க முடியும் . பொதுமக்கள் எவ்வித சுணக்கமின்றி குடும்ப அட்டைகள் தாங்கள் விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகளில் விநியோக பொருட்களின் இருப்பு நிலை மற்றும் பொருட்களை வாங்கும்போது பொருட்களின் விலைப்பட்டியல் ஆகியவற்றை குறுஞ்செய்தி மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அட்டையின் திருத்தத்தை இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். நியாய விலைக்கடை வேலை நேரத்தினையும் குறுஞ்செய்தி மூலமாக தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது பொதுமக்களின் நலன்கருதி குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கு சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.”,என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்.
இத்திட்டம் குறித்து பயணாளி மகேஸ்வரி தெரிவிக்கையில்
“ நான் இப்போது மின்னணு குடும்ப அட்டை பயன்படுத்தி வருகிறேன். இது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. பழைய ரேஷன் கார்டு பேப்பர் போல இருந்தது அதனால் கிழிந்து போவதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. தற்பொழுது இந்த அட்டை புதிய வடிவில் கைக்கு அடக்கமாக இருப்பதால் அதை எளிதாக பயன்படுத்திட முடிகிறது,”என்றார்.