April 25, 2017 தண்டோரா குழு
கோவையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பல்வேறு பகுதிகளில் நடந்த மறியல் போராட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் , தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு மற்றும் திமுக தலைமையில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இதன் ஓரு பகுதியாக கோவை மாவட்டத்தில் முழு அடைப்பு முழுமையாக நடைபெற்று வருகின்றது.குறிப்பாக கோவை மாநகரில் உள்ள முக்கிய வீதிகளான ஓப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு,குறு தொழில் கூடங்கள் , உணவகங்கள், பேக்கரிகள் என அனைத்தும் அடைக்கப்பட்டன.
பெரும்பாலான ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் கோவை கிராஸ்கட் வீதியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையில் சாலை மறியல் போரட்டம் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஏ.ஐ.டி.யு.சி. சி.ஐ.டி.யு, எல்.பி.எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று உக்கடம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மறியல் போராட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.