April 26, 2017 தண்டோரா குழு
பாலியல் தொந்தரவிலிருந்து குழந்தைகள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து நடிகர் நிவின்பாலி விளக்கும் “நோ,கோ,டெல்” (No, Go, Tell)என்ற காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கேரள மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள இந்த காணொளியில் நடிகர் நிவின்பாலி நடித்துள்ளார். தவறான நபர்களிடமிருந்து தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து நிவின்பாலி விளக்குவதை மையமாக கொண்டது தான் இந்த காணொளி. இது மலையாள மொழியில் வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில், நடிகர் நிவின்பாலி குழந்தைகளுடன் ஒரு விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து, “குட் டச்” (Good Touch) மற்றும் “பேட் டச்” (Bad Touch)யின் வித்தியாசத்தை குறித்தும் உதடு, மார்பு மற்றும் பின் பகுதியை தொட யாருக்கும் இடம் கொடுக்ககூடாது என்பது குறித்தும் விளக்குகிறார்.
மேலும், “நோ,கோ,டெல்” (No, Go, Tell) என்னும் வார்த்தைகளை அவர்கள் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் அவர்களை தவறாக தொடும்போது “நோ” என்று அவர்கள் கத்த வேண்டும், “கோ” என்றால் அங்கிருந்து ஓடி சென்று, அவர்கள் நம்பும் நபரிடம் சென்றுவிட வேண்டும். “டெல்” என்றால் நடந்த சம்பவத்தை அவர்களுக்குளே வைத்திராமல், அவர்களுடைய பெற்றோர், அல்லது ஆசிரியர் இல்லையென்றால் அவர்கள் முழு மனதோடு நம்பும் நபரிடம் சொல்ல வேண்டும் என்று நிவின்பாலி எடுத்துரைக்கிறார்.
குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே நல்ல விழிப்புணர்வை கொண்டு வரும் விதமாக இந்த காணொளி அமைந்துள்ளது.இந்த காணொளி ஜூட் அந்தோணி ஜோசப் என்பவரால் தயாரிக்கப்பட்டது. கேரள மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதற்கு வசனங்களை தயார் செய்து தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.