April 28, 2017 தண்டோரா குழு
துருக்கி கடற்கரை பகுதியில் சரக்கு கப்பலுடன் மோதிய விபத்தில் ரஷ்ய போர் கப்பல் கடலில் மூழ்கியது.இந்த விபத்தில் அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள் பத்தரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கி அருகே கருப்பு கடற்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த ரஷ்ய போர்க்கப்பல் “லிமான்” எதிரில் வந்த டோகோ நாட்டு சரக்கு கப்பல் மீது மோதியது. இந்த விபத்தில் ரஷ்ய போர் கப்பல் பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. கடற்படையினரின் துரித செயலால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து துருக்கி கடற்கரை பாதுகாப்பு படை அதிகாரி கூறுகையில்,
“விபத்துக்குள்ளான ரஷ்ய கப்பலில் பயணம் செய்துக்கொண்டிருந்த 78 பேர் பத்திரமாக மீட்கப்படுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்டு சுமார் 3 மணி நேரம் கழித்து, ரஷ்ய போர்கப்பல் கடலில் மூழ்கிவிட்டது” என்றார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில்,
“ இந்த விபத்து ஏற்பட்டபோது, அதிலிருந்த கப்பல் குழுவினருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. கப்பல் கடலில் மூழ்காமல் இருக்க துருக்கி கடற்படையினர் போராடியுள்ளனர். ஆனால் அவர்களுடைய போராட்டம் பயனற்று போனது.
‘லிமான்’ போர் கப்பல் மீது மோதிய சரக்கு கப்பலின் பெயர் யூசர்சிப் எச். அது கால்நடைகளை ஏற்றிக்கொண்டு வந்தது என்று தெரிய வந்துள்ளது. அதில் பயணித்த கப்பல் குழுவினர் அனைவரும் பாதுக்காப்பாக உள்ளனர். இந்த விபத்து பனிமூட்டத்தால் நடந்துள்ளது.” என்றார்.
ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான இந்த கப்பல் உளவு பார்க்கும் கப்பலாக இயங்கி வந்தது. இது ரஷ்யாவின் கருப்பு கடல் கடற்படை பகுதியில் தனது பணியை செய்து வந்தது. வானொலி மற்றும் நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகள் கொண்டு அறியும் உபகரணங்கள் இந்த கப்பலில் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.