April 29, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டு இருக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகள் வழங்கும் விழாவில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மின்பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம். தங்கு தடையின்றி தேவையான மின்உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எங்கேயாவது மின்பழுது ஏற்படும் போது அதனை உடடினயாக சரிசெய்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நான் பதவியேற்று 70 நாட்கள் ஆகிறது. இந்த நாளில் 1560 கோப்புகளுக்கு கையெழுத்திட்டு இருக்கேன். ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை. அரசு இயந்திரம் வேகமாக துரிதமாக செயல்படுகிறது. தேங்கியிருந்த கோப்புகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வாக்குறுதியின் படி படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது”
இவ்வாறு முதல்வர் கூறினார்.