May 2, 2017 தண்டோரா குழு
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன் வரவேண்டும் என்று தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக அரசின் நிர்வாகம் அனைத்து மாவட்டங்களிலும் முடங்கி நிற்கின்ற நேரத்தில், 73 நாட்களில் ஆயிரத்து 570 கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
கோப்புகளில் கையெழுத்து போடுவது முதலமைச்சரின் கடமைகளில் ஒன்று. இவ்வளவு கோப்புகளில் கையெழுத்து போட்டதாகக் கூறும் முதலமைச்சர் எத்தனை முக்கிய திட்டங்களுக்கு அந்த கோப்புகளின் மூலம் அனுமதி கொடுத்திருக்கிறார்?
முதலமைச்சருக்கு வரும் வழக்கமான கோப்புகளில் கையெழுத்து போட்டதை எல்லாம் கணக்கு போட்டு, முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாக இமேஜை செயற்கையாக தூக்கி நிறுத்தும் நோக்கோடு முதலமைச்சர் பேசியிருப்பது வெறும் விளம்பரத்திற்கு உதவுமே தவிர, ஆக்கப்பூர்வமான அரசு நிர்வாக செயல்பாட்டுக்கு நிச்சயம் உதவாது.
அ.தி.மு.க., ஆட்சியில் அழுகிப் போன அரசு நிர்வாகத்தை இதுபோன்ற பகட்டான பேச்சுகள் மூலம் மறைக்க முயலாமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதலமைச்சர் தமது கையெழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.”
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.