May 2, 2017 தண்டோரா குழு
வாட்ஸ்ஆப்பில் சாட்டிங் செய்வதை எளிதாக்கும் வகையில், புதிதாக ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் சமூக வலைத்தளம் உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தும் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப நிறுவனம் அதில் புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.அந்தவகையில், தற்போது நாம் அடிக்கடி பயன்படுத்தும் தனிநபர் சாட்டிங்கையோ அல்லது ஒரு குழுவையோ, PIN செய்து கொள்ளும் வசதி ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் (2.17.163) தரப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான நேரங்களில் தொடர்பில் இருக்கும் குழுவையோ அல்லது தனிநபர் சாட்டிங்குகளையோ மிக விரைவாகவும், எளிதாகவும் கையாள முடியும்.
நீங்கள் வாட்ஸ்ஆப்பில் எத்தனை சாட்டிங் வைத்திருந்தாலும், அவற்றில் மூன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும். விருப்பமுள்ள சாட்டிங் மீது லேசாக அழுத்தினால், PIN குறியீடு காணப்படும். அதை தேர்வு செய்து புதிய வசதியை பயன்படுத்தலாம்.
கடந்த பிப்ரவரி மாத கணக்கின்படி, வாட்ஸ் ஆப் உலகளவில் 120 கோடி பயனாளர்களையும், இந்தியாவில் சுமார் 20 கோடி பயனாளர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.