April 28, 2016 தண்டோரா குழு
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அடுப்புப் பற்ற வைப்போர்கள் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொடூரமான கோடை வெயிலினால் ஏற்படும் மரணங்களையும், நெருப்பினால் ஏற்படும் பொருள் இழப்புகளையும், தடுக்க பீகார் அரசு ஒரு புதுமையான தீர்வை அமுல் படுத்தியுள்ளது.
இது வரை பீகார் மாநிலத்தில் இக்கோடையின் தாக்கம் 66 மனிதர்களையும், 1,200 விலங்குகளையும் பலி கொண்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.
சமையல் செய்யும் நெருப்பினில் இருந்து கிளம்பும் தீப்பொறிகள் வெப்ப அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டுக் காய்ந்த சருகுகளின் மேல், அல்லது காய்ந்த மரங்களின் மேல் விழுவதால் தீ விபத்து ஏற்பட்டுப் பல வீடுகள் தீப்பிடிக்க ஏதுவாகிறது என்பது அரசின் வாதம்.
2 நாட்களுக்கு முன்பு பிகுசாராய் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 300 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. மனிதர்களும் ,விலங்குகளும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
தீ எவ்வாறு பரவுகிறது, எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது ,என்பதை எல்லாம் முழுமையாகக் கணக்கிட்ட பின்னரே பீகார் அரசு இத்தீர்வை அமுல் படுத்தியுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த வகையிலும் நெருப்பைப் பற்றவைக்கக் கூடாது எனவும், மத சமந்தமான சடங்குகளும் இதற்கு விதி விலக்கு அல்ல எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு சட்டத்தை மீறுவோர் 2 வருடம் வரைக்கும் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா என்றும், எத்தனைப் பேர் இதைக் கடைப்பிடிப்பர் என்றும் மக்கள் மனதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
தண்டனையின் கடுமை காரணமாகவும், மக்களின் நலனை உத்தேசித்தும், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, ஆகிய பிரதேசங்களிலும் இது போன்று 100 க்கும் மேற்பட்ட மரணங்கள் சம்பவித்துள்ளன.
பேரிடர் இழப்புகளைக் கையாளும் நிர்வாகத்தின் தலைவர் வியாஸ்ஜி கூறுகையில், இதுவரை பீகார் வெள்ளப் பெருக்கையும், வறட்சியையும் எதிர்கொண்டிருந்தது. ஆனால் இந்த வருடம் மிகக் கடுமையான வெப்ப அலைகளை எதிர் கொள்ளும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வெப்பக் காற்று கடுமையாக வீசுவதால் சிறு தீப்பொறி கூட பெரிய நெருப்பாக மாறும் சூழல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.