May 2, 2017 தண்டோரா குழு
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை அரசுக்கே ஒதுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து மருத்துவர்கள் வித்யா ஷரோண் மற்றும் காமராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்கள் மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் இந்த 50 % இடஒதுக்கீடை கலந்தாய்வு மூலமே நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் சிறுபான்மை கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள சேர்க்கை இடங்களை இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து ஒதுக்கீட்டு இடங்களை கேட்டு பெறவில்லை என்று தமிழக அரசுக்கும் விதி மீறிய தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்காத எம்.சி.ஐ.க்கும் நீதிமன்றம் தலா 1 கோடி ருபாய் அபராதம் விதித்துள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.