May 2, 2017 தண்டோரா குழு
உலகிலேயே அதிக வயதுடையவர் என்று கருதப்படும் இந்தோனேசியாவை சேர்ந்த 146 வயது சொடிமெஜோ என்பவர் மரணமடைந்தார்.
சொடிமெஜோ 1870-ம் ஆண்டு பிறந்தவர் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவர் இந்தோனேசியாவில் உள்ள மத்திய ஜாவாவின் சோலோ என்னும் பகுதியில் வசித்து வந்தார்.
இந்தோனேசியாவில் 19௦௦-ம் ஆண்டு தான் பிறப்பு பதிவு நடைபெற தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் சொடிமெஜோ சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் அவருடைய வயது 146 என்பது உண்மையானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொடிமெஜோ ஏப்ரல் 12-ம் தேதி உடல் நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறு நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய அவர் சற்று சோர்வாகவே காணப்பட்டார்.
சொடிமெஜோவின் பேரன் சுயண்டோ கூறுகையில்,
வீடு திரும்பிய அவர், கடந்த இரண்டு நாட்களாக சிறிது கஞ்சி சாப்பிட்டு, கொஞ்சம் தண்ணீர் குடித்தார். அதன் பிறகு, தனது மரண நேரம் வரை ஒன்றும் சாப்பிடவோ குடிக்கவோ விரும்பவில்லை.அவர் மரணத்திற்கு முன், யாரிடமும் அதிகம் பேசவில்லை. குடும்பத்தினர் மட்டும் அவர் அருகில் இருக்க விரும்பினார்.
சொடிமெஜோ அவருடைய மனைவி, உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள் என அனைவரையும் விட அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.