May 4, 2017 தண்டோரா குழு
ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உள்ள கோயம்புத்தூரில்,50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர், தட்டுகளை தயாரிக்க மற்றும் விற்க அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையர் விஜய்கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உள்ள கோவை மாநகராட்சியில் நாள்தோறும் 600 டன்னுக்கு மேல் சேரும் குப்பைகளில் பெரும்பாலும் மக்காத, மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்.
இதனை முற்றிலுமாக தவிர்த்து, இயற்கைக்கு கேடு விளைவிக்காத பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் விழிப்புணர்வு நிகழ்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக ராஜா தெரு,தாமஸ் தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிலையங்களில் இருந்து சுமார் 5 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும், கோவை மாவட்டத்தின் இயற்கை வளம் பாழாகாமல் இருக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கடந்த மே 1ஆம் தேதி முதல் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.