May 4, 2017 தண்டோரா குழு
சமூக ஊடகங்களில் முன்னிலை வகிக்கும் ஃபேஸ்புக் இணையதள நிறுவனத்தின் லாபம் 76.6% உயர்வடைந்துள்ளது.அதவாது ரூ.20 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது.
மார்க் ஜூகும்பேர் என்பவரால் கடந்த 2004ம் ஆண்டு துவங்கப்பட்டது பேஸ்புக்.சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கிற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில், லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 76.6% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.அதாவது 20 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதேகாலத்தில் ஒட்டுமொத்த வருமானம் 8.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சியடைந்துள்ளது.விளம்பரங்கள் மூலமான வருமானம் 7.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தும் உள்ளது. இது ஒட்டுமொத்த வருமானத்தில் 85% பங்களிப்பை கொண்டுள்ளதாக, ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டின் முடிவில், விளம்பர வருமானம் 32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சி பெறும் எனவும் மதிப்பீடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலையில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்த மூன்று மாதங்களில் 17 சதவிகிதம் அதிகரித்து 194 கோடியை எட்டி இருப்பதாகவும் விரைவில் 200 கோடியை எட்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொபைல் விளம்பர வருமான சந்தையில், ஃபேஸ்புக் நிறுவனம், 22.6% சந்தை பங்களிப்புடன், 2வது இடத்திலும் கூகுள் 35% சந்தை பங்களிப்புடன் ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமான விளம்பர வருமானத்தில் முதலிடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.