May 5, 2017 tamilsamayam.com
இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளவில் வசூலில் சாதனைப்படைத்து வரும் பாகுபலி 2 படம் ஆஸ்காருக்கு அனுப்ப வலியுறுத்தப்போவதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பாகுபலி-2 ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகிய முன்னனி நடிகர்கள் நடித்துள்ள பாகுபலி 2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகின்றது.
இந்திய அளவில் அதிக சாதனைப்படைத்த தங்கல், சுல்தான் ஆகிய இந்தி படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.
1000 கோடி:
பாகுபலி வெளியாகி 6 நாட்களில் ரூ. 750 கோடி வசூலித்துள்ளது. இது 1000 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆகிய படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் பாகுபலி 2 படம் இணையும் என தெரிகிறது.
பாகுபலி படம் ரூ. 650 கோடி வசூல் செய்த நிலையில்,தற்போது பாகுபலி 2 படம் அதை விட அதிக வசூலை குவித்து வருகிறது.
ஆஸ்கார்:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தியாவுக்கே பெருமை சேர்த்த பாகுபலி 2 படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகுபலி படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பாராட்டு விழா நடத்துவேன் என்றும், ஆஸ்கார் விருதுக்கு படத்தை அனுப்ப ஏற்பாடு செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.