May 5, 2017 தண்டோரா குழு
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு வழங்க உணவகம் ஒன்றை விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு, அம்மாநிலத்தில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக “அன்னபூர்ணா போஜனாலையா” என்ற உணவகத்தை விரைவில் திறக்கப்படும் என்று அவருடைய அரசு அறிவித்துள்ளது.
இதுக்குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“குடிமக்கள் ஒருவரும் பசியால் வேதனையடையக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த உணவகம் திறக்கப்படவுள்ளது. காலை தாலியா, இட்லி சாம்பார், போகா, பகோடா ஆகியவை 3 ரூபாய்க்கு கிடைக்கும். மதியம் ரொட்டி, பருப்பு, அரிசிசாதம் மற்றும் காய்கறிகள் ஆகியவை 5 ரூபாய்க்கும் கிடைக்கும். அதேபோல் இரவு உணவும் 5 ரூபாய்க்கும் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பேரணியின் போது, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “மக்கள் ஒருவரும் பட்டினியுடன் உறங்கப்போவதில்லை,அனைவருக்கும் உணவு வழங்கப்படும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.