May 5, 2017 தண்டோரா குழு
தில்லியில் மாணவி, ‘நிர்பயா’ ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்துள்ளது.
தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ‘நிர்பயா’ 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டு ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி 13 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவன் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவனை தவிர மற்ற 5 பேருக்கும் தில்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது.
இதில் ஒருவர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், மற்றொருவர் சிறுவன் என்பதால் 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டான்.
குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ” இந்த வழக்கு அரிதினும் அரிதானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களையும், இந்தக் குற்றம் நிகழ்த்தப்பட்ட கொடூரமான முறையையும் கருத்தில் கொண்டு கீழ் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது.
குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவது என்ற வாதத்துக்கே இடமில்லை. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது” என்றனர்.