May 5, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் நடைபெற்று வரும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தேவைப்பட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும், நீட் தேர்வை நீக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு தமிழக அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்ததால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.அவசர சிகிச்சை தவிர்த்து வேறு எந்த திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளும் தற்போதைக்கு மேற்கொள்ள மாட்டோம் எனவும் அரசு மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, பொது மக்கள் சேவை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மருத்துவ மாணவர்களில் ஒரு தரப்பினர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தலைமை சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதையடுத்து, ” போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் கொடுங்கள். அதையும் மீறி போரட்டம் முடிவுக்கு வரவில்லை என்றால், தேவைப்பட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சி செய்யலாம் என பரிந்துரைக்கிறேன்.” என நீதிபதி சத்திய நாராயணா தெரிவித்தார்.மேலும், இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
எஸ்மா சட்டம் என்றால் என்ன ?
எஸ்மா என்பது அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டமாகும். மக்களுக்கு சேவை அளிக்கக் கூடிய அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினால், அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்.