May 8, 2017 தண்டோரா குழு
பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீதான சி.பி.ஐ. வழக்குகள் தொடரும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் 1990-1997 ஆண்டுகளில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட மாட்டு தீவனத்தில் ரூபாய் 945 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. லாலு பிரசாத் யாதவ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் மற்றொரு வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே சமயம் லாலு மீதான வழக்கு ஒன்றில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்து குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் சிபிஐ தரப்பிலும் லாலுவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்த இரு மனுகளையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் “லாலு பிரசாத் யாதவ் மீதான சி.பி.ஐ. வழக்குகள் தொடரும். அவர் மீதான அனைத்து வழக்குகளிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். லாலுவுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தண்டனை மற்றும் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க முடியாது.” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் லாலு பிரசாத் யாதவுக்கு சாதகமாக ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.