May 8, 2017
நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் மர்மமான முறையில் தனது தோட்டத்தில் இறந்து கிடந்தார்.அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, நாமக்கலில் உள்ள ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலின் போது பணப்பாட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
அதன் பின் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இல்லத்திலும், அலுவலகத்திலும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அமைச்சர்
விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே அமைச்சரின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிக்க வருமான வரித்துறையினர் திட்டமிட்டனர்.
இந்நிலையில் சுப்பரமணியன் அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுப்பிரமணியனின் மரணம் அரசியல் வட்டாரத்தில் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.