May 8, 2017 தண்டோரா குழு
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணத்தொகையாக 2 பேருக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இன்று வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் . இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரனிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, இம்முகாமில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணத்தொகையாக 2 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலை, 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளிவல் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.25,000-ற்க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஆகியவை ஆதி திராவிட நலத்துறையின் மூலமாக பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா, துணை ஆணையர்(கலால்) வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், ஆதி திராவிட நல அலுவலர் மோகன், உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.