May 8, 2017 தண்டோரா குழு
மே 31 ம் தேதிக்குள் பள்ளி வாகனங்களுக்கு சிறப்பு சோதனை செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு மோட்டார் வாகன (பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள், 2012-ன் படி ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில், பள்ளி வாகனங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது இடத்தில் வைத்து வாகனங்களின் தகுதிச் சான்று நடப்பில் உள்ளதா எனவும், இவ்வாகனங்களில் பயணிக்கும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இருக்கை வசதி, அவசர கால வழி, உரிய முறையில் அமைப்பட்டுள்ளதா எனவும் மற்றும் வாகனங்களுக்கு மஞ்சள் வார்ணம் பூசப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி,தமிழகத்தை சார்ந்த அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டர் வாகன ஆய்வாளர்களுக்கு இச்சிறப்பு சோதனையினை மேற்கொள்ளவும், 31.05.2017க்குள் இப்பணியை நிறைவுசெய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும் இச்சோதனை மேற்கொள்ள அவர்களது பள்ளியைச் சார்ந்த வாகனங்களை பொது இடத்திற்கு ஆய்விற்கு கொண்டுவர வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்களை ஜூன் 1 முதல் பொது சாலையில் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தாமதம் இன்றி தங்களது வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.