April 30, 2016 தண்டோரா குழு
சமீப காலமாக உலகத்தில் உள்ள குறிப்பிட சில நாடுகளில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஜாதி மதத்தின் பெயரால் கவுரவக் கொலைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவையே.
சமீபத்தில் பாகிஸ்தானில், இருபது வயது ஹயாட் கான் என்பவர் தனது 16 வயது சகோதரி சுமாரியாவை, கை பேசியில் தெரியாத ஆணுடன் பேசிக்கொண்டிருந்த காரணத்திற்காகச் சமையல்
அறையில் உபயோகிக்கும் கத்தியால் குத்தி வெளியில் தள்ளியுள்ளார்.
சகோதரி தெரியாத ஆண் பிள்ளைகளுடன் கை பேசியில் பேசுவது அவரது கௌரவத்திற்கு இழுக்கு. அதுவும் தான் கேட்ட பின்பும் பொறுப்பின்றி பதில் சொன்னது அதைவிட இழுக்கு என நினைத்த அண்ணன். அவளைக் கத்தியால் குத்தியுள்ளான். பின்னர்தான் அவன், தான் செய்தது தவறு என உணர்ந்துள்ளான். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது.
தற்போது, தான் பயமுறுத்துவதற்காகச் செய்தது வினையாகிவிட்டது என்று சிறையில் வருத்தப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
அவரது தந்தையும் மற்ற உறவினர்களும் அவரை மன்னித்து விட்டாலும், காவல் துறையினர் தாங்களாகவே முன் வந்து இவ்வழக்கினைப் பதிவு செய்துள்ளனர்.
அங்கிருக்கும் சட்டப்படி, 3 நபர்கள் திருக்குரான் மீது சத்தியம் செய்து குற்றவாளிக்குச் சாதகமாகக் கூறினால் நீதிபதி அவர்களை விடுவித்து விடுவார்.
அவ்வாறு ஏதும் நடந்து குற்றவாளி தப்பித்து விடக்கூடாது என்பதற்காக, காவல் துறை மிகுந்த எச்சரிக்கையுடன் வழக்கைப் பதிவு செய்யுள்ளது.
எப்படியும் இது போன்ற கௌரவத்திற்காக நடைபெறும் கொலைகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று, காவல் துறையுடன் சேர்ந்து பிரதம மந்திரி நவாஸ் ஷெரீபும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது வரை அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவிலை என்பதே உண்மை.
இதேப் போன்று ஏப்ரல் மாதம் 17 ம் தேதி, முசபர் நகரைச் சேர்ந்த 25 வயது ஷபானா பீபி தனது கணவரது ஒப்புதல் பெறுவதற்கு முன்பே, தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றது அவரது மரணத்திற்குக் காரணமாகி விட்டது.
தனது மனைவி தன்னிடம் கூறாது வீட்டை விட்டுச் சென்றது ,அவரது கௌரவத்தை பாதித்து விட்டது என நினைத்த அவரது கணவன். அவரது தந்தையுடன் சேர்ந்து ஷபானா பீபியை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொன்றுள்ளார்.
ஷபானா பீபியின் சகோதரரான ஆஸாம் ,சகோதரியைக் கொன்ற குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை யென்றால் தானும் தீக்குளிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
வேறொரு சமயத்தில் 58 வயதான முகமது ஷாஃவியா, தனது 3 மகள்களை, சைனாப்-19, சாகர்-17, கீடி-13 பிற ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால், தனது முதல் மனைவி ரோனா அமிர் உடன் சேர்த்துக் காரில் கொலை செய்து தள்ளியுள்ளார். தனது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுமெனின் இதுபோன்ற காரியத்தை 100 முறை செய்யவும் தயங்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இது போன்று கௌரவத்திற்காக மக்களைக் கொன்ற பெற்றோர்கள் ஏராளம். 2008லிருந்து குறைந்த பட்சம் 3,000 கொலைகள் நடந்துள்ளது எனக் கணக்கு கூறுகிறது.
பாகிஸ்தானில் மட்டுமின்றி இந்தியாவிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளம்.
மாந்தியவைச் சேர்ந்த, கௌடா சமூகப் பெண் மோனிகா, கீழ் ஜாதி வாலிபரைத் திருமணம் செய்து கொண்டதற்காக, பெண்ணின் பெற்றோரும், பெண்ணின் மாமாக்களும் சேர்ந்து அவ்வாலிபரை ஏப்ரல் 3ம் தேதி கொலை செய்து தற்கொலை போல் ஜோடித்துள்ளனர்.
இன்னும் சொல்வதென்றால் மார்ச் 14 ம் தேதி திருப்பூர் உடுமலையில் கௌசல்யா என்ற உயர் ஜாதிப் பெண் ஷங்கர் என்ற தாழ்ந்த ஜாதி மாணவனை மணந்ததால், தங்கள் குல கௌரவம் காக்க பெண்வீட்டார் சங்கரைக் கொலைசெய்துள்ளனர்.
இந்த நூற்றாண்டிலும், பல சமூகங்கள் இன்னும் மாறுதல் விரும்பாத, பழமை வாய்ந்த கோட்பாடுகளைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஏட்டில் வராத இது போன்ற, சம்பவங்கள் இன்னும் ஏராளம்.
கௌரவம் என்ற பெயரில் கடவுள் கொடுத்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவ்வாறு கவுரவமே இல்லாமல் கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்வது எந்தவிதத்தில் கவுரவம் எனக் கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது.