May 9, 2017 தண்டோரா குழு
கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
1994ம் ஆண்டு வெளியிடப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற அறிக்கையில் தமிழகம் முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து 2014ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த ரிட் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்திருந்தனர். தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என கூறினர்.இதனையடுத்து, அந்த அறிவிப்பினை எதிர்த்து 2015ல் தொடரப்பட்ட வழக்கில், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதைதொடர்ந்து 2015ல் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும், இவ்வழக்கானது பின்னர் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.